கர்நாடகா மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை, இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார்.
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், எடியூரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் ஆளுநரை சந்தித்து வழங்கினார்.
இதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மை அடுத்த முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த பசவராஜ் பொம்மை, ஆதரவு உறுப்பினர்களின் கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, கர்நாடக மாநில முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணிக்கு பொறுப்பேற்க உள்ளார்.
அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.