கர்நாடகாவில் தனியார் கார் நிறுவனம் ஒன்றிற்க்கு சென்ற விவசாயியொருவர் உருவகேலிக்கு உள்ளாகியிருந்திருக்கிறார். தன்னை கேலி செய்தவர்களை வாயடைக்கவைக்க, திரைப்பட பாணியில் சவால் விட்டு சென்று ஒரு மணி நேர இடைவெளிக்குள் ரூ. 10 லட்ச ரூபாய் ரொக்கத்தை தயார் செய்து அதை கார் விற்பனையாளர்களிடம் கொடுத்து பழி வாங்கியுள்ளார். பணத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக காரை டெலிவரி செய்யும்படி கேட்டிருக்கிறார் அவர். இச்சம்பவம் அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள அந்த கார் நிறுவனத்தின் பாலிரோ வாகனத்தின் ஷோரூமுக்கு அந்த விவசாயி சமீபத்தில் சென்றிருக்கிறார். அங்கு சென்று, வாகனங்களின் விலையை கேட்டறிய முயன்றிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த சில விற்பனையாளர்கள், விவசாயியின் தோற்றத்தை பார்த்து ‘இதலாம் 10 லட்ச ரூபாய் மதிப்புமிக்க விலை உயர்ந்த கார்கள். உங்களால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியுமா?’ என்று நக்கலாக கேட்டு கேலி செய்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்குள்ளான அவ்விவசாயி, அங்கிருந்து உடனடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து காரின் விலையை முழு தொகையாக ரூ.10 லட்சத்தை கையில் கொண்டு வந்திருக்கிறார்.
சொன்னதுபோலவே ஒரு மணி நேரத்துக்குள் பணத்துடன் விவசாயி திரும்பியதால், ஸ்தம்பித்துள்ளனர் விற்பனையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள். பின்னர் சற்று நிதானித்தஅவர்கள், ‘முழு பணத்தையும் கொடுத்துவிட்டாலும்கூட, எங்களால் உடனடியாக டெலிவரி செய்ய இயலாது. இன்னும் 3 – 4 நாள்களில் வண்டியை டெலிவரி செய்கிறோம்’ என கூறியுள்ளனர். ஆனால் அதில் விவசாயிக்கு உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த அவர் ‘கடை ஊழியர்கள் அனைவரும் தங்களின் தவறான அணுகுமுறைக்கு, வாடிக்கையாளர்களாகிய எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தியுள்ளனர். இறுதியில் விவசாயி கெம்பெகௌடா, ஷோ ரூம் விற்பனையாளர்களிடம் “உங்களுடைய ஷோ ரூமில் கார் வாங்குவதில், எனக்கு விருப்பமில்லை. எனக்கு இந்த கார் வேண்டாம்” எனக்கூறி அங்கிருந்து தனது 10 லட்ச ரூபாய் ரொக்கத்துடன் புறப்பட்டு சென்றிருந்திருக்கிறார்.