நாடகக் கலைஞரும், திரைப்பட உறுதுணை நடிகருமான ‘பூ’ ராமு திங்கள்கிழமை மாரடைப்பால் காலமானார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு.
இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தாலும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது.
இதன் காரணமாகத்தான் இவர் தனது பெயருக்கு முன்னாள் பூ ராமு என்று சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக திங்கள்கிழமை காலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது அவரது உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூ ராமுவின் மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரைக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.