இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
உலகின் வேறு எந்த மைதானத்தில் வெற்றி பெற்றாலும், அது லார்ட்ஸ் மைதானத்தில் பெரும் வெற்றிக்கு ஈடாகாது. கிரிக்கெட்டின் புன்னிய பூமியாய் கொண்டாடப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றிருக்கிறது இந்திய அணி.
இங்கிலாந்தை 120 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்தியா. இதன் மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 391 ரன்கள் சேர்த்தது. இதனால், இந்தியாவை விட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
2வது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஏமாற்றத்தை கொடுத்தது. விராட் கோலி உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில், நேற்று (ஆக.16) ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் 22 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா 16 ரன்களிலும் வெளியேறினார்கள். கைவசம் இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் படாதபாடு படுத்தினர்.
இங்கிலாந்து போன்ற கடினமான களத்தில் முன்னணி பேட்ஸ்மேன்களே ரன் எடுக்க திணறுகின்றனர். அப்படி இருக்கையில் பும்ரா மற்றும் ஷமி சிறிது நேரம் நின்றுவிட்டு விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே விக்கெட் எடுக்க முற்படாமல் பும்ராவை தாக்கும் வகையில் பந்துகளை வீசினர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஓவருக்கும் இடையே பும்ராவிடம் வம்பிழுத்தனர்.
இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நன்கு புரிந்துக் கொண்ட முகமது ஷமி – பும்ரா ஜோடி பவுண்டரி, சிக்ஸர் என பேட்டை சுழற்றினர். இருவரும் சுதாரித்துக் கொண்டு காட்டிய அதிரடியால் 9வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 77 ரன்களை குவித்தது. முகமது ஷமி 56 ரன்களும், ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களும் விளாசினர். இதனால் 220 க்குள் முடியவேண்டிய இந்திய அணியின் ஸ்கோர் 298 ரன்களுக்கு சென்றது. அதிலும் விராட் கோலி டிக்ளர் செய்துவிட்டார். இல்லையென்றால் 300 ரன்களை கடந்திருக்கும்.
இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி வரை களத்தில் இருந்த ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் நாட் அவுட்டாகாமல் இருந்தனர். இதனால் இங்கிலாந்திற்கு 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு போதிய கால நேரம் கிடைக்கவில்லை. கடைசி நாளில் மீதம் 2 செஷன்கள் மட்டுமே இருந்ததால் அதற்குள்ளாக 272 ரன்கள் அடிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதனால் அதிரடியாக ஆட முயன்ற அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பேர்ன்ஸ், டாம்னிக் சிப்லே இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். இதன் பின்னர் வந்த ஹமீத் 9 ரன்களுக்கும் பேர்ஸ்டோ 2 ரன்களுக்கும் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 67/4 என திணறியது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 33 ரன்களுக்கு நடையை கட்டினார்.
ரூட்டின் விக்கெட்டிற்கு பிறகு சீட்டுக்கட்டை போல மலமலவென விக்கெட்கள் சரிந்தன. ஜோஸ் பட்லர் மட்டுமே சிறிது நேரம் தாக்குப்பிடித்து நின்ற சூழலில் சிராஜ் அவரின் கதையை முடித்தார். இறுதியில் அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.