வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
அந்த நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
33 வயதான அவருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு முன்னதாக 2008-ஆண்டு பெய்ஜிங், 2012-ஆம் ஆண்டு லண்டன், 2016-ஆம் ஆண்டு ரியோ என மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பெர்முடா சார்பில் பங்கேற்றார். ஆனால் எதிலும்பதக்கம் கிடைக்கவில்லை.
“முதல் முறையாக தன்னுடைய கனவும், அதற்கு மேலாக பெர்முடா நாட்டின் கனவும் நிறைவேறியிருக்கிறது” என்று போட்டியில் வென்ற பிறகு டஃபி கூறியிருக்கிறார்.
டிரையத்லான் பந்தயத் தொலைவை அவர் ஒரு மணி நேரம் 55 நிமிடம் 36 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
மழை காரணமாக 15 நிமிடம் தாமதமாகத் தொடங்கிய போட்டியில், பின்தங்கியிருந்த டஃப்பி, கடைசியில் பந்தயத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
“கடைசி கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கும் வரை முயற்சியைக் கைவிடவில்லை. சாலையின் அந்தப் பக்கத்தில் வந்து கொண்டிருந்த எனது கணவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன்” என்று கூறும் டஃப்பிக்கு அவரது கணவர்தான் பயிற்சியாளர்.
ஒலிம்பிக் வரலாற்றில் பெர்முடா நாட்டுக்குக் கிடைத்திருக்கும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்தச் சாதனையை பெர்முடா மக்கள் கொண்டாடி வருகின்றனர். நாட்டின் பிரதமர் டஃபிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
Congratulations @floraduffy. You’ve worked so hard and you’ve made an entire island proud! 🥇🇧🇲 💪🏼 pic.twitter.com/ScG1AW0A5G
— Premier David Burt (@BermudaPremier) July 26, 2021
பதின்ம வயதாக இருந்தபோது பிரிட்டனுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மறுத்தவர் டஃப்பி. 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட டஃப்பி, விளையாட்டில் இருந்தே ஒதுங்கியிருந்தார்.