டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப் படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும், தமிழ்நாடு முழுவதும் இந்த ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தின அணிவகுப்பில் பங்குபெற இருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் கடைசியில் தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியும், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இடையே இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு ‘இந்தியா 75’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம். நான்காவது கூட்டத்திற்கு எந்தவொரு காரணமுமின்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு. தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக்கப்பெற்ற மாண்புமிகு ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில், எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். மேலும், சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.